கேது - காரகத்துவம்

கேது - காரகத்துவம்:

* இதுவரை நடந்தது அனைத்துமே கேதுவின் காரகத்துவம்.

* அதாவது இப்பொழுது நீங்கள் இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் வரி வரை. அடுத்த நொடி முதல் ராகுவின் காரகத்துவம்.

* ஏனென்றால் இதுவரை நடந்ததை உங்களால் அறிந்து இருக்க முடியும். இனி நடக்க இருப்பதை ராகு பகவானே அறிவார்.

* ராகு கேதுவின் சாரத்தில் அல்லது கேது ராகுவின் சாரத்தில் ஐந்தாம் இடத்தோடு தொடர்பில் இருந்தால், அவர் ஒரு தலை சிறந்த ஜோதிடர். ஏனென்றால் ஏற்கனவே நடந்தது மற்றும் இனிமேல் நடக்க இருப்பது ஆகிய வற்றை அவர் மிக துல்லியமாக கூறுவார். அல்லது ராகு கேதுக்கள் சுய சாரம் பெற்று ஐந்தாம் இடத்தோடு தொடர்பு கொள்வது.  ஐந்தாம் மற்றும் எட்டாம் இடத்தோடும் தொடர்பில் இருந்தால் மிகச் சிறந்த பொக்கிஷங்கள் அவர் சம்பந்தப்பட்ட துறையில் கிடைக்கும்.

* அதிர்ஷ்டம், மேஜிக் இந்த வார்த்தைக்கு ராகு கேதுக்கள் சம்பந்தம் பெறுபவை. ஐந்தாம் இடத்தோடு கேது சம்பந்தம் பெரும் பொழுது, அவர் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு மேஜிக் நடைபெறும். அது பொருள் ஸ்தானமாக இருந்தால் பொருளிலும் உயிர் ஸ்தானமாக இருந்தால் உயிரிலும் நடைபெறும்.

* கேதுவின் நட்சத்திரத்தில் அதாவது அஸ்வினி, மகம், மூலம் இவற்றில் லக்ன புள்ளி இருக்க ஜாதகர் மிக நல்லவர் அல்லது கௌரவம் மட்டுமே பார்க்கக் கூடியவர் என்று கூறலாம். ஏனென்றால் கேது என்றால் விதை என்று ஏற்கனவே புதன் பற்றிய பதிவில் கூறிவிட்டோம். விதை என்றால் பிறந்த குழந்தை என்ற எடுத்துக் கொள்ளுங்கள். பிறந்த குழந்தையை நாம் எளிதாக ஏமாற்றிவிடலாம். அல்லது பிறந்த குழந்தை யார் எதைச் சொன்னாலும் உடனே எளிதில் நம்பி விடும். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ஏமாளியை  நல்லவர் என்றே கூறுகிறோம்.

* கேது ராகுவின் நட்சத்திரத்தில் இருக்க ஜாதகர் பிஞ்சிலேயே பழுத்தவர் என்று எளிதாக கூறிவிடலாம். அல்லது இனி நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே அறிந்தவர் என்று கூறிவிடலாம்.

* சூரியனின் உச்சபுள்ளி அஸ்வினி மூன்றாம் பாதம். எனவே கேதுவின் நட்சத்திரத்தில் லக்ன புள்ளி விழுந்தாலோ அல்லது எந்த கிரகங்கள் இருந்தாலோ அவர்கள் கௌரவம் மிக்கவர்கள் என்று பார்த்த உடனே கூறிவிடலாம். உதாரணமாக கன்னி லக்னம், லக்னாதிபதி 12ல் மகம் நட்சத்திரத்தில். நாம் லக்னாதிபதி மறைவு ஜாதகர் பிறந்ததே வேஸ்ட் என்று கூறுவோம். ஆனால் அவர் கௌரவம் மிக்கவர். கால புருஷனுக்கு பூர்வபுண்ணியம் ஆன சிம்மத்தில் அமர்ந்து கொண்டு சொகுசான அயன சயன பயணத்தை அனுபவிப்பார் என்று கூறிவிடலாம். ஜாதகர் பிறந்ததிலிருந்தே செல்வ செழிப்புடன், அல்லது இவர் குடும்பத்தில் இவரை மட்டுமாவது பெற்றோர் செல்வ செழிப்புடன் சொகுசாக வாழ வைத்து இருப்பார். கடைசிவரை ஜாதகர் மிக நன்றாகவே வாழ்வார், என்று பலன் கூற வேண்டும்.

* கேது என்றால் மறைக்கப்பட்ட விஷயங்கள் என்று கூறலாம். ஏனென்றால் இதற்கு முன் நடந்தவை அனைத்தும் கேதுவின் காரகத்துவம் என்று முன்னரே கூறினோம். அப்படியானால் இந்த உலகம் எப்பொழுது தோன்றியது அதற்கு பின் என்னென்ன இந்த நிமிடம் வரை நடந்தது என்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது. மறைக்கப்பட்ட விஷயங்கள் நமக்கு தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளது. எனவே கேதுவின் திசையில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று கணிப்பது மிக முக்கியம். கேது என்றால் பாவங்களை கழுவுதல் என்று பொருள். இதுவரை நாம் செய்த பாவ புண்ணியங்களை எடுத்து செய்பவர் கேது. இவர் உச்சம் பெரும் கேட்டை 1ம் பாதம், பாவங்களைக் கழுவும் நட்சத்திரம். கேது விடம் சேர்த்து வைத்த விஷயங்களை ராகுவே வெளிப்படுத்துவார். ஏற்கனவே நாம் புதனின் காரகத்துவத்தில் கூறியபடி, புதனை ஜோதிட கிரகம் என்றும் புதன் கேது வின் விதை ஆகிய கர்மாக்களை தனது மிதுனத்தில் வெளிப்படுத்துபவர் என்று தெளிவாகக் கூறியிருந்தோம். எனவே விதைகுள் ஒளிந்திருப்பது ஒரு மரத்தின் வளர்ச்சி, வாழ்வு, இறுதியாக வீழ்ச்சி. இதே போலவே ஒரு மனிதனுக்கும் பிறந்தபின் குழந்தைப்பருவம் இளமைப்பருவம் முதுமைப்பருவம் இதில் என்னென்ன நல்லவை கெட்டவை நடக்கிறது என்பதை கேது மற்றும் புதனை வைத்து அறியலாம்.

* கேது - பெண்குறி (உள்ளிழுத்தல்) கேது- ஏற்கனவே நடந்தவை என்பதால் உள்ளே தான் போகும் வெளியே போகாது. அதனால்தான் உள்ளிழுக்கும் தத்துவம்.
ராகு - ஆண்குறி (வெளித் தள்ளுதல்). திருமண பொருத்ததில் ராகு இருக்கும் இடத்தில் பெண்ணுக்கு கேது இருந்தால், வேறு எந்தப் பொருத்தமும் பார்க்கத் தேவையில்லை. திருமணம் கண்ணை மூடிக்கொண்டு செய்யலாம். கணவன் மனைவிக்குள் நல்ல அந்நியோன்யம் இருக்கும். மாறாக கேது இருக்கும் இடத்தில் பெண்ணுக்கும் கேது இருந்தால், இரண்டுமே உள்ளிழுக்கும் உறுப்புகள்.  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. பிரிவினை ஜாதகம். அல்லது வேறு அமைப்பால் ஜாதகர்கள் சேர்ந்து வாழ நேரிடும்.

* கேது நவாம்சத்தில் மேஷத்தில் இருந்து கடகம் வரை வருவார். மேஷம் முதல் கடகம் வரை முன்ஜென்ம வாழ்க்கையின் நிகழ்வுகளை குறிக்கும். தனுசு முதல் மீனம் வரை இனி வருங்கால நிகழ்வுகளைக் குறிக்கும். நவாம்ச பாதையில் தனுசு முதல் மீனம் வரை ராகு வருவர்.
    முன்ஜென்ம வாழ்க்கையின் பாவ புண்ணியங்களை அனுபவிக்க சிம்மம் முதல் விருச்சிகம் வரை அதாவது முன்ஜென்ம வாழ்க்கையின் பூர்வபுண்ணிய தொடர்ச்சி இப்பொழுது நடக்கும் நமது நிகழ்கால வாழ்க்கை.

* பொதுவாக ஒருவருக்கு கேது திசை நடக்கும் பொழுது, நாம் ஏற்கனவே கூறியபடி கடந்த கால நிகழ்வுகளின் பாவ புண்ணியங்களை கேது அனுபவிக்க வைப்பார். கேது சுய சாரம் பெரும்பொழுது அல்லது சந்திரனின் அல்லது குருவின் சாரத்தை பெரும்பொழுது, நடக்கும் தசா புத்திக்கு ஏற்ப  தாராபலனை பொருத்து, நல்லவை கெட்டவை ஜாதகருக்கு கேதுவின் திசை யில் நடைபெறும். பெரும்பாலும் முன் ஜென்ம பாவத்தை கழுவி விடுவார். மேற்கண்ட கிரகங்களின் நட்சத்திர சாரம் பெரும்பொழுது. ஏனென்றால் கேது என்றால் பாவங்களை கழுவுதல் என்று முன்கூட்டியே பார்த்தோம்.

* கேது பாவங்களை கழுவுகிறார் என்றால் இப்பொழுது நடக்கும் நொடி வரை உள்ள பாவ புண்ணிய கணக்குகளை சேர்த்து வைக்கிறார் என்று பொருள். அதாவது விதைக்குள் ஒரு பெரிய மரம்  உள்ளது போல் நமது கர்மா அனைத்தும் கேதுவிடம் உள்ளது. கேது விதை என்று கூறிவிட்டோம் கேது தன்னுடைய வேலையை புதன்- கேட்டை நட்சத்திரத்திடம் கொடுத்து வேலை வாங்கும். அதனால்தான் புதன் வலுத்தவர்களை புதனை ஜோதிட கிரகம் என்று கூறுகிறோம். புதனை கர்மாவை கூறுபவர் என்று கூறுகிறோம்.

* கேது எதையுமே இரண்டாக பிரிக்கும். கேது ராகுவின் சாரத்தில் இருக்க அல்லது கேதுவின் சாரத்தில் ராகு இருக்க முன்னோர் வழி நமது தாத்தா இரண்டு திருமணம் செய்தவர் என்று கூற பலன் சரியாக இருக்கும். இதேபோல் கேது சூரியன் சாரத்தில் இருக்க அல்லது சூரியன் கேதுவின் சாரத்தில் இருக்க, அப்பாவுக்கு இரண்டு தாரம் என்று கூறினால் ஜாதகர் சண்டைக்கு வந்து விடுவார்கள். இதேபோல் சந்திரனுக்கும் கூறலாம். இரண்டு அம்மா, இரண்டு அப்பா என்று யாருக்கும் கிடையாது, ஜாதகரின் பெரியப்பாவுக்கு குழந்தை இல்லாமல் இருக்கலாம். பெரியப்பாவே இவரையும் குழந்தைபோல் எடுத்து பாவிக்கலாம். இவர் இரண்டு கொள்ளி வைப்பார் என்று கூறலாம். ஏனென்றால் சூரியன் கொள்ளி. கேது- எதையும் இரண்டாகப் பிரிப்பர். எனவே இரண்டு கொள்ளி. இதையே பெரியம்மாவுக்கும் கூறலாம். கேது- பிரிக்கும் இடம் ஜாதகருக்கு உயிர் ஸ்தானமாக இருந்தால் மட்டுமே இதை கூற வேண்டும்.

உதாரணமாக கேது 4-ஆம் இடத்தை இரண்டாகப் பிரிக்கிறார் என்றால், இரண்டு அம்மா என்று கூறக்கூடாது. அந்த நான்காம் இடம் பொருள் ஸ்தாணம் ஆக இருந்தால் இரண்டு சொத்து அல்லது அதற்கும் இரண்டிற்கும் மேற்பட்ட சொத்து என்று கூற வேண்டும். பலன் துல்லியமாக வரும்.

* கேது - மருத்துவ கிரகம். இரண்டாகப் பிரித்தல் கேதுவின் காரகத்துவம். மற்றும் தைத்தல் கேதுவின் காரகத்துவம். ஐந்தாம் அதிபதி கேதுவின் சாரத்தை தொடர்பு கொள்ள, ஜாதகருக்கு சிசேரியன் அல்லது குழந்தை பிறக்கும் நேரத்தில் மருத்துவ வேலைகள் கண்டிப்பாக நடைபெற்று இருக்கும் என்று பலன் கூற வேண்டும்.

* கேது மற்றும் புதன் இரண்டுமே பாத ரஜ்ஜுவாக வருபவை. அதாவது ஒரு மரம் கீழிருந்து மேலாக வளர்ந்து தனது கர்மக் கணக்கை முடித்தவுடன்  இலைகளை உதிர்த்து தனது வளர்ச்சியை இழந்து மடிந்து மீண்டும் பாதத்திற்கு வருபவை. இது கிட்டத்தட்ட வளர்பிறை - தேய்பிறை தத்துவம் தான். அதாவது வளர்பிறையில் அல்லது தேய்பிறையில் பிறந்தவருக்கு வாழ்க்கையில் முற்பகுதி முன்னேற்றமா? அல்லது பிற்பகுதி முன்னேற்றமா? என்பதை கேதுவை வைத்து அறிந்துவிடலாம்.

* கேதுவை வைத்து ஒருவர் வம்பு வழக்கில் கோர்ட் கேஸ் என்ற செல்வார் என்றால் அவர் வெற்றி பெறுவாரா அல்லது தோல்வி பெறுவாரா என்பதை ஜாதக கட்டத்தை பார்த்தவுடனே கூறிவிடலாம். உதாரணமாக ஐந்தாம் இடத்தோடு சனி - கேது சம்பந்தப்பட்டால், அதுவும் பொருள் ஸ்தானமாக இருந்தால் ஜாதகர் பூர்வீக சொத்து சம்பந்தமாக கோர்ட்டு கேஸ் என்று அலைவார்.  சனி - கர்மகாரகன் மற்றும் நீதிபதி. கேது - சட்டம் மற்றும் வழக்கு. எனவே சனி திசையிலோ அல்லது கேது திசையிலோ அல்லது சனி புத்தியிலோ அல்லது கேது புத்தியிலோ கண்டிப்பாக வம்பு வழக்கு சம்பந்தமாக நீதிபதி முன் கண்டிப்பாக  ஜாதகர் நிற்பார். இது ஐந்தாம் இடத்தோடு சம்பந்தப்படும் போது. மற்ற இடங்களில் சம்பந்தப்படும் போது அதன் உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவம் அதற்கு ஏற்ப ஜாதகர் நிற்பாரா அல்லது அந்த இடம் சம்பந்தப்பட்ட காரக உறவுகள் நிற்பார்களா என்று பலன் கூற வேண்டும்.

* கேது சுய சாரம் பெறும்பொழுது பொதுவாக சுயதொழில், அதிக முதலீடு, ஜாமீன் போடுவது, வம்பு வழக்கு என்று ஈடுபடுவதை முழுவதுமாக குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே நடந்து முடிந்தவை அனைத்தும் கேதுவின் காரகத்துவம் என்று கூறிவிட்டோம். ராகுவின் காரகத்துவம் இனிமேல் நடக்கப் போவது என்று கூறிவிட்டோம். ராகு திசை நடக்கிறது என்றால், ஒரு வாகனத்தில் நாம் பயணம் செய்கிறோம் என்றால் நேராக முன்னோக்கி செல்கிறோம் என்று பொருள். அதுவே கேது சுய சாரம் என்றால், அதை வாகனம் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி செல்கிறது என்று பொருள். பின்னோக்கி செல்கிறது என்றால் ஜாதகருக்கு அந்த பயணம் சுத்தமாக பிடிக்காது. பொதுவாக மனிதனுக்கு ஆசைகள் பல இருக்கும். அடுத்து நடக்க இருப்பதையே மனம் அதிகம் நினைக்கும். கடந்தகால கேதுவின் பாவங்களை கழுவுதல் என்பது கேது தசையில் கண்டிப்பாக நடக்கும். கடந்து போன விஷயங்கள் அனைத்துமே ஜாதகருக்கு பொருளைத் தருபவை இல்லை. படிப்பினையை, அனுபவத்தை மட்டுமே தருபவை. எனவேதான் கேதுவை ஞானக் காரகன் என்கிறோம்.

* கேது - இவற்றின் நட்சத்திரங்கள் 1 5 9-ல் இருக்கிறது. ஐந்தாம் இடமான குலதெய்வத்தில் கேதுவின் நட்சத்திரம் வருவது ஏனென்றால், நமது பிதுர்க்கள் கேதுக்கள் ஆவார்கள். ராகு - கேதுக்களை பாம்பின் புற்றாக உருவகப் படுத்திக் கொள்ளுங்கள். பாம்பு புற்றின் மண்ணை எங்கே எடுத்து வைத்தாலும் பிடிமண்ணாக வளரும். வேறு எந்த மண்ணும் வராது, வளராது. அதனால்தான் நமது குலதெய்வ கோவிலில் உள்ள மண்ணை எடுத்து நாம் இருக்கும் ஊரின் வசிப்பிடத்திற்கு அருகே புற்றாக வளர்த்து வழிபடுகிறோம். மேலும் பாம்புகளை அடிக்கக் கூடாது அவற்றை நம் முன்னோர்கள் என்றும் கூறுகிறோம். உண்மையில் நமது கர்மவினைகள் பாம்புகள் தான். அதனால்தான் பாம்பு புற்றை இடிக்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.

* கேதுவை வைத்து வீட்டின் வாஸ்துவை கூறிவிடலாம். நான்காம் இடத்தில் கேது இருந்தால் வீட்டின் கழிவு நீர் செல்லும் இடத்தில் பிரச்சினை உள்ளது என்று கூறிவிடலாம். அதுவும் கேதுவின் வடமேற்கு திசையில் கண்டிப்பாக உள்ளது என்று கூறிவிடலாம்.
    கேதுவோடு சந்திரன் சம்பந்தப்பட்டால் போர்வெல்லில் நீர் வர தடை உள்ளது என்று தசா புத்திகேற்ப பலன் கூற பலன் துல்லியமாக இருக்கும். இதை வைத்து போர்வெல் போடும் காலங்களை ஜாதகருக்கு எளிதாக கூறிவிடலாம். பொதுவாக நான்காம் இடத்தில் கேது இருக்கும் திசைக்கு ஏற்ப ஜாதகரின் வீடு புற்றின் மேலேயோ அல்லது புற்றின் ஓரத்திலேயோ கண்டிப்பாக இருக்கும். நாம் நகரத்தில் இருப்போம் என்று நினைப்போம் ஆனால் வீட்டின் மண்ணின் தன்மை புற்றின் தன்மை கண்டிப்பாக இருக்கும். இதை வைத்து ஜாதகரின் தோஷங்களை அறியலாம். ஜாதகருக்கு நல்லவை நடக்க தடங்கள் அதிகம் ஏற்படும்.

* நான்கில் கேது இருக்க ஜாதகருக்கு சொந்த வீடு உண்டு. அது பொருள் ஸ்தானமாக இருந்தால். உதாரணமாக மேஷ லக்னத்திற்கு கடக கேது. ஒரு செங்கல் கூட ஜாதகர் எடுத்து வைத்திருக்க மாட்டார் ஆனால் சொந்த வீட்டில் இருப்பார். ஏனென்றால் கேது என்றால் உள்ளிழுத்தல் என்று பொருள். அது பொருளை உள்ளிழுக்கும்.

* ஐந்தில் கேது, அது பொருள் ஸ்தானமாக இருந்தாலும், உயிர் ஸ்தானமாக இருந்தாலும் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வருவார். ஏனென்றால் ஐந்தாமிடம் விதை வளரும் இடம். காலபுருஷனுக்கு  5 ல் மகம் நட்சத்திரம் உள்ளது. மகம் நட்சத்திரம் விதை விதைக்க சிறந்த நாள் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

* கேது, சூரியன் அல்லது சந்திரன் உடன் இனைய  நான்காம் அதிபதி அல்லது ஒன்பதாம் அதிபதி உடன்
இனைய, அம்மா வழி மற்றும் அப்பா வழி சொத்துக்கள் கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது என்று பலன் கூற 100 சதவீதம் சரியாக இருக்கும்.

* இதுபோக முற்பகுதியில் சொந்த வீடு அமையுமா?  அல்லது பிற்பகுதியில் அமையுமா?
முற்பகுதியில் ஜாதகருக்கு வாழ்க்கையா? அல்லது பிற்பகுதியில் ஜாதகருக்கு வாழ்க்கையா? கோர்ட் கேஸ் வம்பு வழக்கு என்றால் எப்பொழுது வெற்றி பெறுவார்? என்பதற்கு கேது மூலம் பலன் எளிதில் கூறலாம்.

* ஐந்தில் கேது - பொருள் ஸ்தானம் என்றால், மூலப் பத்திரம் கையில் உள்ளது என்று பொருள்.  கேது என்றால் மூலமே.

* கேதுவை வைத்து ஒரு ஜாதகர் வலுவானவரா அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறியலாம். ஏனென்றால் மரம் எவ்வளவு பெரியதாக வெளிப்பார்வைக்கு இருந்தாலும், அதன் வேர்கள் ஆன மூலமே பிரதானம். மூலமே - கேது. கேதுவை வைத்து வீரியத்தை தாங்கும் தன்மையை அறியலாம்.  வீரியம் - ராகு.

* ஜாதகருக்கு இரண்டில் கேது. அது பொருள் ஸ்தானமாக இருந்தால் ஜாதகருக்கு பொருளாதார பிரச்சினை கண்டிப்பாக இருக்கும். குடும்பம் அமையாது என்று கூறக்கூடாது. இரண்டில் கேது என்றாலே திருமணம் கிடையாது, விவாகரத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள். உயிர்ப்பொருள் பார்த்து பலன் கூறவேண்டும். அதைப்போல் கோச்சாரத்தில் லக்னத்திற்கு இரண்டில் கேது பொருள் ஸ்தானமாக வரும் பொழுது கையில் ஜாதகருக்கு பணம் இருக்காது. கிடைப்பதில் தடை ஏற்படும்.

* கேது என்றாலே ஃப்ளாஷ்பேக். முன்னோக்கிய பயணத்தை விட பின்னோக்கிய பயணத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும். எனவே கேது தசையில் மிக கவனம் தேவை. கேது திசைக்கு மட்டும் ஒரு பரிகாரம் நன்றாக வேலை செய்யும். "நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்".

      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.