ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது

 #*போகர்*

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது ? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது  ?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான் ? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை ?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப் படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழ வைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதி வைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது.இன்றும் காடுகளில் மூலிகை தேடிச் செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும் கண்டு அதைக் கைப்பற்றுவர்.



அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது.அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே  செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.



அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான் வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீனயோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,

புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பலசுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக் கொள்ளத்தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும் போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்து போன. பின்னர், அவரைத் தேடிக் கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன்முதுகில் சுமந்து கொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகி விட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.