படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்... யாருங்க
படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்
கல்வி தான் மனித குலத்தை முன்னேற்றும், ஏழ்மையில் இருந்து காப்பாற்றும், விடுவிக்கும் போன்ற புத்தொளிக் கால லட்சியங்கள் பாதி உண்மை மட்டுமே. சொல்லப் போனால் கல்வி நம்மை ஒரு பொறிக்குள் மாட்ட வைத்துவிடும் எனத் தோன்றுகிறது. நான் இதை என் வாழ்க்கையில் இருந்தே புரிந்துகொண்டேன், ஏனென்றால் இன்னமும் சமூக சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் முன்பு ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த போது அங்கு நிறைய மார்வாரி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு இளங்கலை வகுப்பில் ஒரு மாணவன் என்னிடம் சீண்டலாகக் கேட்டான். “சார் நீங்க ஒரு மாதம் எவ்வளவு சம்பாதீப்பீங்க?” அசிங்கமாக இருக்கும் என்பதால் நான் சொல்லவில்லை. அவன் என் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி சொன்னான், “சார் உங்க ஒரு மாச சம்பளத்தை நான் பத்து நாளில் சம்பாரிச்சிருவேன்.” எனக்கு கடுமையான எரிச்சல் வந்தது. அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவனை அழைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் கேட்டறிந்தேன். அவனுடைய அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். அதில் அவன் பள்ளி மாணவப் பருவத்திலேயே மாலையானதும் போய் உட்காருவான். இது அவனது சின்ன வயதுப்பழக்கம். இப்போது அவன் கல்லூரியில் மதிய வகுப்புகளில் இருப்பதால் அவனுக்கும் காலையிலும் மாலையிலும் இரவு மணி 10 வரை கடையில் இருந்து வியாபாரம் பார்க்க முடிகிறது. அவன் பணம் சம்பாதிப்பதன் நுணுக்கங்களைக் கற்று வருகிறான். அதை வைத்தே அவன் என் மாத சம்பளத்தை தன்னால் விரைவில் ஈட்டிவிட முடியும் என நம்பிக்கையுடன் கூறினான். அவனிடம் இருந்த கேள்வி பணமே உலகின் அச்சாணி, அவனால் தன்னுடைய அறிவையும் திறனையும் வைத்து அப்பணத்தை ஈட்ட முடியும் போது அவன் எதற்காக என்னைப் போன்ற ஆசிரியரிடம் இருந்து மொழியையும் இலக்கியம், தத்துவத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. நான் அவனிடம் கூடுதலான அறிவு அவனுடைய வியாபாரத் திறனை மேம்படுத்தும் என்று கூறி ஆற்றுப்படுத்தினேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய அந்த நம்பிக்கையும் தளர்ந்து வருகிறது. இன்று மிகச்சிறந்த கல்வி நிலையங்களை நடத்துபவர்கள் பெரும்பாலானோர் படித்தவர்கள் அல்ல. இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் சிலர் சொற்பமாகப் படித்தவர்களே, சரிவர ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களோ, புத்தகம் படிப்பவர்களோ அல்ல. அதானி ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவை ஆள்பவர்கள் எவரும் படித்தவர்கள் அல்ல. படிப்பின் காலம் முடிந்துவிட்டதெனத் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம் கல்வி நம்மை பொருளாதார ரீதியாக முடக்கி விடுகிறது. அது நமது சம்பாத்திய திறன் குறித்து ஒரு தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது. உ.தா., உங்களுக்கு ஒரு லட்சம் வேண்டுமெனில் நீங்கள் உங்கள் ஊதியம் என்ன, செலவீனம் என்னவென கணக்கிட்டு பணத்தை சேர்த்து வைத்து அதை ஈட்ட வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும். ஒருவேளை எதிர்பாரா செலவுகள் வந்தால் உங்கள் இலக்கு இன்னும் தள்ளிப் போகும். உடனே கடன் வாங்குகிறோம். ஆனால் பணத்துக்கு மாத வருமான வேலையை நம்பியிராதவர்களுக்கு வேறு நூறு வழிகள் பணம் ஈட்டத் தெரிகின்றன. அவர்கள் கடன் வாங்கினால் அது தம் வணிகத்தை மேம்படுத்தவோ அல்லது நட்டத்தில் இருந்து வெளிவரவோ தான் வாங்குவார்கள். நாம் ஒரு ஆண்டு முழுக்க போராடி சேர்க்கும் பணத்தை அவர்களால் சில நாட்களில் சம்பாதிக்க முடியும், முடியாமலும் போகலாம், ஆனால் ஒரு சாத்தியம் அவர்களுக்குத் தெரிகிறது, அது நமக்குத் தெரியாது.
நீங்கள் இப்போது இந்தியாவில் வாழ்ந்தால் உங்கள் தெருவில், அடுத்தடுத்த தெருக்களில் சொந்த வீடு, சொத்துக்கள், தங்கத்தில் முதலீடு வைத்திருப்பவர்கள் யாரென்று பாருங்கள், ஈ.எம்.ஐ இல்லாமல் சொந்தப் பணத்தில் வாங்கிய காரில் போவது யாரென்று பாருங்கள், பெரும்பகுதியினர் பெரிய படிப்பு படிக்காதவர்களாகவே இருப்பார்கள்.
சென்னை வேளச்சேரியில் என் நண்பன் சார்லஸ் முன்பு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அப்போதும் போர்ட்டில் கூலியாக வேலை பார்த்து வந்தார். அவர் எண்பதுகளில் அங்கங்கே நிலங்களை வாங்கிப் போட்டார். பின்னர் அவற்றில் தன் கடும் முயற்சியால் வீடு கட்டினார். அவரது பணமதிப்பே பல கோடிகள் அன்று. இன்று நாற்பது ஐம்பது கோடிகள் இருக்கும். இத்தனைக்கும் அவரால் ஒரு நாளிதழைக் கூட வாசிக்க முடியாது. அவர் காலத்தில் சென்னைக்கு வேலை தேடி வந்தவர்கள் கூடிப் போனால் ஒரு சிறிய வீட்டை மட்டும் வாங்கியிருப்பார்கள். இவர் அவர்களை விட 50-100 மடங்கு சம்பாதித்து விட்டார். இப்படி பலரை நான் சென்னையிலும் பெங்களூரிலும் கண்டிருக்கிறேன்.
படிப்பைக் கொண்டு ஒருவர் ஏழை நிலையில் இருந்து மத்திய / மேல் மத்திய நிலைக்குப் போய் விடுகிறார். ஆனால் அதன் பிறகு அவர் தேங்கி விடுவார். பொருளாதாரம் சுணங்கினால் அவருடைய சம்பளம், வேலையில் வளர்ச்சி இல்லாமல் ஆகும். அவரது பிள்ளைகளும் பெரும்பாலும் மேல்மத்திய வர்க்கமாகவே இருப்பார்கள். இதை இன்று மத்திய வர்க்கப் பொறி என்கிறார்கள். இந்தியாவில் ஏழைகளை விட மத்திய வர்க்கமே மிகப்பெரிதாக இருப்பது இதனால் தான்.
ஏனென்றால் படிப்பு நாம் செல்வந்தர் ஆகவோ சுதந்திரமாக இருக்கவோ சொல்லித் தரப்படுவதில்லை. பள்ளியிலோ கல்லூரியிலோ நீங்கள் அதற்குரிய படிப்பை எடுக்காவிடில் எப்படி பணக்காரர் ஆவது என சொல்லித் தர மாட்டார்கள். எப்படி ஒருவரிடம் வேலை பார்ப்பது என்றே சொல்லித் தருவார்கள். கல்வியின் நோக்கமே மத்திய வர்க்க அடிமைகளை உருவாக்குவது தானோ எனத் தோன்றுகிறது. அந்த உண்மையை எதிர்கொள்ள விரும்பாமலே நாம் கல்வியின் மகத்துவம், விடுதலை மார்க்கம், அறிவின் சிறப்பு என ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம்.
என்னுடைய உறவினர் ஒருவர் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காதவர். சொந்தமாக முயன்று வாழ்க்கையில் மேலே வந்தவர். எனக்கு அவ்விதத்தில் அவர் மீது பெரும் மதிப்பு உண்டு. அவர் நன்றாக ஓவியம் வரைவார். அவர் முதலில் விளம்பரப் பலகைகளில் வரைந்தார். பிறகு நாம் உழைத்து ஏன் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து சிறிது பணத்தைத் திரட்டி சொந்தமாக விளம்பரத் தட்டி வைக்கும் வியாபாரத்தைத் தொடங்கி பெரும் வளர்ச்சி பெற்றார். அப்போது டிஜிட்டல் முறையில் விளம்பரத் தட்டி வைக்கும் மாற்றம் வந்தது. அவர் அதற்கு மாறி இன்னும் வளர்ந்தார். அடுத்து பொதுவிடங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அவர் தனது விளம்பரப் பலகைகளை இரும்பு விலைக்கு விற்க நேர்ந்தது. நஷ்டம். சற்று கலங்கினார். ஆனால் அந்த நேரம் பார்த்து ரியல் எஸ்டேட் துறை வளர்ந்தது. நிறைய பேர் எங்கள் மாவட்டத்தில் நிலம் வாங்கி முதலீடு பண்ண விரும்பினர். அவர் ரியல் எஸ்டேட் துறைக்குள் நுழைந்து அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு முன்பு இருந்ததை விட 20 மடங்கு வளர்ந்தார். சில ஆண்டுகளிலேயே கோடிகளில் பணம் ஈட்டினார். இப்போது அவர் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. அவர் நான் பதின் வயதில் இருக்கையில் அடிக்கடி என்னுடைய இலக்கிய ஆர்வத்தை கலாய்த்துக் கொண்டே இருப்பார். அவருடைய பார்வை நான் என்னுடைய நேரத்தை அரூபமான காரியங்களில் வீணடிக்கிறேன் என்பது. புத்தகங்களால் என்ன பயன், எழுத்தாளர்கள் அடுத்தவர்களின் கருத்துக்களைப் படித்து காப்பி அடிக்கிறார்கள் என்று கூறிக் கொண்டே இருப்பார். நான் ஆரம்பத்தில் அது அவரது தாழ்வுணர்வால் வரும் பார்வை என நினைத்தேன். இப்போது யோசிக்கையில் அவர் சொன்னது சரிதான் எனத் தோன்றுகிறது.
இன்னொரு விசயத்தைப் பற்றி நான் அடிக்கடி யோசிக்கிறேன்: ஒருவேளை என்னுடைய இந்த உறவினர் நன்றாகப் படித்திருந்தால் ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராகி இருப்பார். பொருளாதார ரீதியாகவும் சமூக மரியாதையிலும் இதைவிட மோசமான நிலையில் இருந்திருப்பார். ஆக அவர் படிக்காமல் போனதாலே வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து போராடி முன்னேறினார். உலகம் குறித்த ஒரு நடைமுறை ஞானத்துடன் இருந்தார். அல்லாவிடில் ஒரு மத்திய வர்க்க அடிமையாகி இருப்பார்.
என் நண்பர் ஒருவர் பேராசிரியர். என் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஊருக்குப் போகையில் தன்னை வந்து சந்திப்பவர்கள் பார்க்க தளுக்காக ஆடையணிந்திருக்க மாட்டார்கள், அவர்கள் மிகக்குறைவாகவே படித்திருப்பார்கள், தொழில்நுட்பமோ எந்த அறிவுத்துறைகளில் பரிச்சயமோ இல்லை, அவர்கள் காலையில் இருந்து தம் தோட்டங்களுக்குப் போய் உழைத்துவிட்டு சேறுடனே வீட்டுக்கு வருவார்கள், பார்க்க பக்கி மாதிரி இருப்பார்கள், ஆனால் அவர்களிடம் தன்னைவிட நூறு மடங்கு அதிக பணமும் சொத்தும் உண்டு என்றார். இதை எல்லா மாவட்டங்களுக்கும் சொல்ல முடியாது என்றாலும் இப்படி ஒரு பெரும் உலகம் நம்மைச் சுற்றி உள்ளதை நாம் கவனிப்பதில்லை. படிக்க படிக்க நாம் உண்மையில் இருந்து விலகிக் கொண்டே போகிறோம். படிக்காதவர்கள் எதில் பணம், எது எதிர்காலம் என்பதில் நம்மை விடக் கூடுதல் தெளிவாக இருக்கிறார்கள். ஆம், அடிமட்ட வணிகர்களில் பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு சாமர்த்தியமும் ஆதரவும் இருந்தால் முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமானவை. மத்திய வர்க்க ஊழியர்களுக்கோ அப்படி எந்த எதிர்காலமும் இல்லை. அவர்கள் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக பொந்துக்கள் வாழும் எலிகளே. கடன், கடனுக்கு மேல் கடன் என எச்சிற் பருக்கைகளை நம்பி இருட்டில் ஒளிந்திருப்பவர்களே. ஒவ்வொரு அரசாங்கமும் வரியை அதிகப்படுத்துகையில் மென்னி நெரிக்கப்படுபவர்களே. எதையும் துணிந்து செய்யும் சொல்லும் துணிச்சல் அற்றவர்களே.
என்னுடைய வீட்டருகே ஒரு காய்கறிக் கடை நடத்துபவர் இருக்கிறார். தமிழர். திருவண்ணாமலைக்காரர். (பெங்களூரில் காய்கறிக்கடை, பழக்கடை நடத்துபவர்கள் அனேகமாக அனைவரும் திருவண்ணாமலைக்காரர்களே.) கடை வாடகை 15000. அதற்கு மேல் அவருடைய வாடகை வீடு இருக்கிறது. ஒருநாள் தற்செயலாகப் பேசும் போது அவர் தமிழில் முதுகலைப் பட்டமும், பி.எட் பட்டமும் முடித்தவர் எனத் தெரிய வந்தது. இயல்பாகவே நான் அவரிடம் “ஏன் இவ்வளவு படிச்சிட்டு வேலைக்குப் போகாம கடை நடத்துறீங்க?” என்று கேட்டேன். அவர் சொன்னார், “சார் என் கூட படிச்ச பசங்க ஸ்கூல்ல வேலை பார்க்கிறாங்க, நல்லா டிர்ஸ் பண்ணிட்டு டிப் டாப்பா இருக்கானுங்க. ஆனால் சம்பளம் 10,000-20,000க்குள்ள தான் இருக்கும். நான் அழுக்கா இருக்கேன். என்னைப் பார்த்தா படிச்சவனா தெரியாது. ஆனா அவனுங்கள விட பல மடங்கு அதிகமா சம்பாதிக்கிறேன். என் டைம் என் கைல இருக்கு. தேவைப்பட்டா மேலே வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுப்பேன். எம் பொண்டாட்டி இங்கே வந்து கடையை பார்த்துப்பா. அவனுங்க காலை 8 மணிக்கு வேலைக்குப் புறப்பட்டா வீட்டுக்கு வரவே 9 ஆயிரும்.” அவருடைய தம்பியும் பி.எட் படித்திருக்கிறார். அவர் அடிக்கடி கடையை வந்து பார்த்துக்கொள்வார். எனக்கு அவர்கள் இருவரையும் பிடித்திருந்தது. விரைவில் உழைத்து முன்னேறி விடுவார். அவருடன் படித்தவர்கள் ஒரு பைக் வாங்க வங்கிக்கடன் வாங்க அலையும் போது இவர் கார் வாங்கிவிடுவார். கடையையும் பெரிதுபடுத்துவார். சொந்தமாக வீடு வாங்குவார். ஏனென்றால் பணம் வரும் வழி எதுவென அவர் தன் சொந்த முயற்சியில் கண்டுபிடித்துவிட்டார். தன் உழைப்பை மற்றொருவருக்குக் கொடுத்து லாபத்தில் ஒரு சிறுபங்கை ஊதியமாக வாங்க மாடாக ஓட மாட்டார். எனக்கு இந்த மனிதர் மீது மிகுந்த மரியாதை வந்துவிட்டது. பெங்களூரில் நான் பார்த்தவர்களிலேயே அதிக விழிப்புணர்வு கொண்டவர் அவர் தான் என நினைக்கிறேன்.
இந்த அடிப்படையான உண்மை அறிந்தவரக்ள் துரதிஷ்டவசமாக மேல்தட்டை சேர்ந்தவர்கள். மார்வாரிகளும் வணிக சமூகங்களுமே. அவர்களே அரசாங்கத்தின் மேல் அமர்ந்து கட்டுப்படுத்துகிறார்கள். மிகச்சொற்பமாகப் படித்த அவர்களிடம் மிகப்பெரிய படிப்பாளிகள் கைகட்டி நிற்கிறார்கள் என்பதே எதார்த்தம்.
நம் கல்வியமைப்பு இந்த அடிப்படை உண்மையை எல்லாருக்கும் சொல்லித் தந்தால் நம் மக்கள் மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள். நான் ஒரு குழந்தையை வளர்ப்பதானால் அவனை ஓய்வு நேரத்தில் டியூஷன், திறன் வளர்ச்சிப் பயிற்சி என அனுப்பாமல் ஒரு கடையில் வேலைக்கு அனுப்புவேன். அவன் பணத்தை உற்பத்தி செய்வது எப்படியென தன் சுயமுயற்சியால் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். சொந்தமாக எதையாவது உருவாக்கி விற்றோ, தன் திறனை பயன்படுத்தியோ லாபம் ஈட்டச் செய்வேன். அவன் தன் பணமீட்டும் திறனை மேம்படுத்த படிப்பை பயன்படுத்த சொல்வேன், வேலைக்கு விண்ணப்பம் போடாமல் தனக்கான பணத்தை அவன் சுயமாகத் தேடிப் போகச் செய்வேன்.
பௌதீக உலகுக்கு வெளியே நாம் கற்கும் அத்தனை அறிவுகளும் ஒருவித சுயகிளர்ச்சிக்கான விளையாட்டு மட்டுமே எனத் தோன்றுகிறது.
கல்வி சமத்துவத்தை, சுதந்திரத்தை, விடுதலையைத் தருகிறதா? இல்லையென்பேன். அதிகாரமும் பணமுமே இவற்றைத் தருகிறது.
அதிகாரத்தையும் பணத்தையும் கல்வியைக் கொண்டு அடைய முடியாது. வணிகம் பணத்தையும், அரசு வேலையும் அரசியலுமே அதிகாரத்தைத் தருகிறது. அரசியலில் மிக அதிகமாக படித்தவர்கள் மக்களிடம் இருந்து விலகி இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. அதிகாரத்தையோ பொருளாதார ஸ்திரத்தன்மையையோ அடைவதில்லை. பண்பாட்டு அறிவை எடுத்துக் கொண்டால் படித்தவர்கள் ஒருவித மீபொருண்மை, கடப்புநிலைவாதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் - அவர்கள் தமக்காக அன்றி இல்லாத அருவங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் நம் நாட்டுக்கு வேலை செய்ய வரும் போது அவர்களும் நம்மைப் போன்ற சிந்தனை அடிமைகளாக, அதிகாரத்தைக் கண்டு நடுங்குபவர்களாக இருக்கிறார்கள் எனக் காண்கிறேன். கல்வியும் வேலையும் உலகம் முழுக்க மனிதனின் முதுகெலும்பை உடைத்துவிடுகின்றன.
படித்து டை கட்டிக்கொண்டு பைக்கில் வேலைக்குப் போகிறவர்களை விட அழுக்கு சட்டையுடன் மூலைக்கு மூலை பானிபூரி விற்பவர்களே மேலானவர்கள் என நினைக்கிறேன். இந்த டை கோஷ்டி நம் பொருளாதாரத்தில் சிறிய சலனம் ஏற்பட்டால் வீட்டில் வேலையின்றி உட்கார்வார்கள், ஒவ்வொரு இடமாக வேலை கேட்டு அலைவார்கள், வடநாட்டில் இருந்து அரைகுறை ஆங்கிலத்தை வைத்து செயலி வழி வட்டிக்கு கடன் தருபவர்களிடம் வாங்கி குடித்து அழிவார்கள். ஆனால் இந்த பானிபூரி வியாபாரிகள் அழியவே மாட்டாரக்ள்.
இத்தனை இத்தனை அடிமைகளை உற்பத்தி பண்ணுகிற கல்வியமைப்பை, பள்ளிகள், கல்லூரிகளை, படிப்பை, ஒரு குழந்தை தன் வாழ்வின் முதல் 22 ஆண்டுகளை வீண் உழைப்பில் செலுத்துவதை நாம் ஏன் இவ்வளவு கொண்டாடுகிறோம் என எனக்குப் புரியவில்லை.
நன்றி Abilash Chandran
கருத்துகள்
கருத்துரையிடுக